Saturday, June 28, 2008

எப்படி???

முதல் அறிமுகத்திற்கு பின் நம் நட்பு தொடர்ந்தது எப்படி??



ஒரே வகுப்பில் படித்தாலாவது அவ்வப்போது ஒரு 'ஹாய்' சொல்லிக்கொள்ள முடியும்,

நாம இரண்டு பேரும் வெவ்வேறு க்ளாஸ்......பின் எப்படி??



ஒரே டிபார்ட்மெண்டிலாவது படித்தோமே.........அதுதான் நம் நட்பு தொடர காரணம்.

உனக்கு சீனியர் என்ற பயமெல்லாம் என்னிடம் முதலிலேயே இருந்ததில்லை, இருந்தும் ஒரு பயந்துபோன முகபாவத்தை வைத்துக்கொள்கிறாய் என ரொம்ப லேட்டாகதான் புரிந்தது.



என் நண்பன் உனக்கு தூரத்து உறவாகபோனது தான் நம் நட்பு மேலும் பலப்பட வழிவகுத்தது.



அவன் உறவு முறையில் உனக்கு அண்ணனாக போனது எனக்குள்ளாக ஒரு ஆறுதல் தெரியுமா??

அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்கு அப்போவும் தெரில, இப்போவும் சொல்ல தெரில.



சொந்தக்காரன் அவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறாயோ, அதே அளவு இம்பார்டென்ஸ் எனக்கும் நீ தர வேண்டும் என என் மனம் அடிக்கடி சண்டையிடும் எனக்குள்ளாக.



ஆனால் வெளிக்காட்டிக்கவில்லை!!



நமக்கு பிடித்த பெண், நம்மை 'அண்ணா' ன்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்னு எப்போ உணர்ந்தேன் தெரியுமா??

நீ என் நண்பன் .......அதான் உன் சொந்தக்கார அண்ணனை எங்கே என என்னிடம் கேட்பதற்காக என்னிடம்



"அருண் அண்ணா எங்கே??" என நடுவில் கமா.......ஃபுல் ஸ்டாப் எதுவும் இல்லாமல் கேட்டுவிட, ஒரு நிமிஷம் பதறிபோய்ட்டேன்.



என்னையும் அண்ணன்னு கூப்பிட்டிட்டியே ன்னு மனசு கிடந்து அடிச்சிகிச்சு:(



அப்புறமாதான் நீ என்கிட்ட உன் அண்ணா எங்கேன்னு கேட்குறேன்னு புரிஞ்சு நிம்மதி பெருமூச்சு வந்தது.



இப்படி.........இப்படி தான், உன்மேல கொஞ்சம் கொஞ்சமா நட்பும் நேசமும் எனக்குள்ள உருவாகியது.

Friday, June 27, 2008

எப்போது???

நாம் முதல் முதலில் எப்போது சந்தித்திக்கொண்டோம் என நினைவிருக்கிறதா??


இரவு முழுவதும் விழித்திருந்து படித்தாலும், பரீட்சை ஹாலுக்கு போவதற்கு முன்னமே மறந்து போகும் எனக்கு, நாம் முதன் முதலில் சந்தித்தது மட்டும் பசுமையாக நினைவிருக்கிறது.


என் நண்பனிடம் நீ கேட்டிருந்த எங்களது முந்தைய செமஸ்டர் ரிகார்ட் நோட்புக், அவனிடம் இல்லாததினால், என்னிடம் வாங்கிக்கொள்ள அவன் உன்னிடம் சொல்லிவிட,


தயங்கி தயங்கி......என்னிடம் நீ வந்து கேட்டது,

வேண்டுமென்றே நீ யார்? எந்த செமஸ்டர்? எந்த டிபார்ட்மெண்ட்? எந்த ஊரு?? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு உன்னை கடுப்பாக்கி, பின் ரிகார்ட் புக்கை மறுநாள் தருவதாக கூறி விட்டு,


ரிகார்ட் நோட் வேணும்னா......என்கூட ஒரு கப் காஃபி கேண்டின் யில் குடிக்க நீ வர வேண்டும் என சொன்னதும்,


"ஹலோ உங்க காஃபியும் வேணாம், உங்க ரிகார்ட் நோட்டும் வேணாம்' என்று முகம் சுழித்து காட்டி விட்டு, விறு விறு வென வேகமா காரிடரில் நீ செல்ல..........ஸாரி, ஸாரி என்று கத்திக்கொண்டே நான் உன் பின்னால் ஓடி வர.........அன்று ஆரம்பித்தது நம் அறிமுகம்.


அந்த மைக்ரோ ப்ரோசசர் லேப் காரிடர் இன்னும் அப்படியே கண் முன் வந்து செல்கிறது.



நீ அணிந்திருந்த ஃப்ளு கலர் சுடிதார், தலையில் போட்டிருந்த போனி டெயில்........கையில் வைத்திருந்த குடை:)))[நீ வைத்திருக்கும் குடைக்கென்று ஒரு தனி பதிப்பெழுதுவேன் பார்!!]


கண்களை உருட்டி பேசும் உன் அபிநயங்கள்........இப்படி சொல்லிட்டே போகலாம்.


ஒரே பதிப்பில் எல்லாவற்றையும் சொல்லிட முடியுமா??


வெயிட்.........அடுத்த பதிவில் சொல்றேன்!!!

ஏன்???

மனதில் உள்ளதை சொல்ல தைரியமில்லாமல் கோழையை போல் எழுத்தில் வெளிப்படுத்துகிறேன் என என்னை நீ தவறாக நினைத்தாலும் ப்ரவாயில்லை.

என் மன அழுத்தத்திற்கு இது ஒரு வெளியோட்டமாகவாவது இருந்துவிட்டு போகட்டும்.

உன்னிடமிருந்து கற்றுக்கொண்ட வலைதளமே, எனக்கு தற்போது இருக்கும் ஒரே ஒரு தூது.......உன்னிடம் மனம் திறக்க.

என் மனதின் ஆசைகளை ஒருவேளை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால்??

.........என்னைவிட்டு நீ விலகி சென்றுவிட்டால்??

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை:(

எத்தனை வருடங்கள் கழித்து உன்னை சந்தித்திருக்கிறேன், மீண்டும் உன்னை தொலைத்திட தெம்பில்லையடி கண்ணம்மா.

எனக்கு உன் அருகாமை போதும்.

இப்போது நீ என் மேல் காட்டும் பரிவும், அன்பும் போதும்.

இதற்கு மேலும் எனக்கு எதிர்பார்பும் ஆசையும் உருவாகிறது உன் மேல் என நீ உணர்ந்துக்கொண்டிருந்தால் , என்னிடம் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் கேட்டிருப்பாய்.


உணராததினால்தானே..........கள்ளம் இல்லா அதே நட்புடன் என்னோடு பழகுகிறாய்,

அந்த நட்பும் அன்பும் போதுமடி எனக்கு.


என்று நீயாக என்னை , என் காதலை உணருவாயோ .....அதுவரை காத்திருப்பேன்.


ஏன் இந்த முட்டாள் தனமென்று எண்ணுகிறாயோ??

'ஏன்' என்ற கேள்விகளுக்கும் பல நேரம் நமக்கு விடைகிடைப்பதில்லை அடி என் கண்ணே!!!

உனக்காக...

என் முதல் பதிப்பு உனக்கே உனக்கானதாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

உன்னிடம் மனம்திறந்து பேச முடியாமல் நான் தவிக்கும் தவிப்புகளைதான் பதிக்கபோகிறேன்.

என்றாவது ஒர் நாள், என் எண்ணங்களின் ஓட்டத்தை என் எழுத்துக்கள் உனக்கு உணர்த்தாதா என்ற ஏக்கத்துடன், என் படைப்புகளை தொடங்குகிறேன்.